கடவுளுடைய வார்த்தை வாசிக்க: பைபிள்

  • என்ன இந்த கடவுள் பற்றி நீங்கள் என்ன சொல்ல?
  • என்ன இந்த இயேசு பற்றி நீங்கள் என்ன சொல்ல?
  • என்ன இந்த மக்கள் பற்றி நீங்கள் என்ன சொல்ல?
  • இது உண்மையாக இருந்தால்,, என்ன வித்தியாசம் என்று உங்கள் வாழ்க்கையில் செய்ய முடியும்?
  • நீங்கள் உங்கள் கண்டுபிடிப்புகள் கொள்ளுவதற்காக ஐந்து பேர் யார்?

லுூக்கா 2:1-52

1அக்காலத்தில் ரோம ஆளுகைக்குட்பட்ட எல்லா நாட்டினருக்கும் அகஸ்து இராயன் ஒரு கட்டளை அனுப்பினான். எல்லா மக்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு அக்கட்டளை கூறியது. 2அதுவே முதல் பதிவாக இருந்தது. சீரியாவின் ஆளுநராக சிரேனியு இருந்தபோது அது நடந்தது. 3எல்லா மக்களும் பதிவு செய்வதற்கென தங்கள் சொந்த நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்கள். 4கலிலேயாவில் உள்ள நகரமாகிய நாசரேத்தை விட்டு யோசேப்பு புறப்பட்டான். யூதேயாவில் உள்ள பெத்லகேம் என்னும் நகரத்துக்குச் சென்றான். பெத்லகேம் தாவீதின் நகரம் ஆகும். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவனாகையால் யோசேப்பு அங்கு சென்றான். 5மரியாள் அவனைத் திருமணம் செய்யும்பொருட்டு நிச்சயிக்கப்பட்டிருந்ததால் யோசேப்பும் மரியாளும் சேர்ந்து பதிவு செய்துகொண்டனர். (அந்தச் சமயத்தில் மரியாள் கருவுற்றிருந்தாள்.) 6யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் இருந்தபோது மரியாளின் குழந்தைப் பேற்றுக்காலம் நெருங்கியது. 7அவள் தன் முதல் குமாரனைப் பெற்றெடுத்தாள். விடுதிகளில் அறைகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே மரியாள் குழந்தையைத் துணிகளால் சுற்றி ஆடுமாடுகள் உணவு உண்ணும் ஓர் இடத்தில் வைத்தாள். 8அந்த இரவில் சில மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கள் ஆடுகளைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர். 9தேவதூதன் அம்மேய்ப்பர்கள் முன்னே தோன்றினான். கர்த்தரின் மகிமை அவர்களைச் சுற்றிலும் ஒளிவீசியது. மேய்ப்பர்கள் மிகவும் பயந்தனர். 10தூதன் அவர்களை நோக்கி, “பயப்படாதீர்கள். நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கூறப் போகிறேன். அது எல்லாரையும் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கும். 11தாவீதின் நகரில் இன்று உங்கள் இரட்சகர் பிறந்துள்ளார். அவரே கிறிஸ்துவாகிய கர்த்தர். 12ஒரு குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு ஆடுமாடுகள் உணவுண்ணும் இடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவே நீங்கள் அவரை அறிந்துகொள்ளுவதற்குரிய அடையாளம்” என்றான். 13அதே சமயத்தில் ஒரு பெரிய கூட்டமான தூதர்கள் பரலோகத்திலிருந்து வந்து முதல் தூதனோடு சேர்ந்துகொண்டார்கள். எல்லா தூதர்களும், 14“பரலோகத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள். பூமியில் தேவனை பிரியப்படுத்தும் மக்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்று சொல்லி தேவனைப் போற்றினார்கள். 15தூதர்கள் மேய்ப்பர்களிடமிருந்து கிளம்பி மீண்டும் பரலோகத்திற்குச் சென்றார்கள். மேய்ப்பர்கள் ஒருவருக்கொருவர், “நாம் பெத்லகேமுக்குப் போய் கர்த்தரால் நமக்குத் தெரிவிக்கப்பட்ட இக்காரியத்தைக் காண்போம்” என்று கூறிக்கொண்டனர். 16எனவே மேய்ப்பர்கள் வேகமாகச் சென்று மரியாளையும் யோசேப்பையும் கண்டனர். குழந்தை ஆடுமாடுகள் உணவு உண்ணும் இடத்தில் படுத்திருந்தது. 17மேய்ப்பர்கள் குழந்தையைப் பார்த்தனர். பின்பு தூதர்கள் குழந்தையைக்குறித்துக் கூறியவற்றை அவர்களுக்குச் சொன்னார்கள். 18மேய்ப்பர்கள் கூறியவற்றைக் கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். 19மரியாள் அவற்றைத் தன் இதயத்தில் வைத்துக்கொண்டாள். அவள் அவற்றைக்குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். 20தாங்கள் கண்டவற்றிற்காகவும் கேட்டவற்றிற்காகவும் தேவனை வாழ்த்திக்கொண்டும், அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டும், மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகள் இருந்த இடத்திற்குச் சென்றனர். தூதர்கள் அவர்களிடம் கூறியபடியே அனைத்தும் நடந்திருக்கக் கண்டனர். 21குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனதும், விருத்தசேதனம் செய்யப்பட்டது. அதற்கு “இயேசு” என்று பெயரிட்டனர். மரியாளின் கரு உருவாகுமுன்னே தூதன் குழந்தைக்கு வைத்த பெயர் இதுவேயாகும். 22குழந்தை பெற்ற பெண் சுத்தமாகும் பொருட்டு மோசேயின் விதிகள் கூறியவற்றைச் செய்யும்படியான காலம் வந்தது. யோசேப்பும், மரியாளும், இயேசுவை தேவனிடம் அர்ப்பணிக்குமாறு எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். 23தேவனுடைய பிரமாணத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “வீட்டின் முதற்பேறான குமாரன் பிறந்ததும் அவன், ‘தேவனுக்கு விசேஷமானவனாகக் கருதப்படுவான்.’” 24“இரண்டு காட்டு புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகக் கொடுக்கக்வேண்டும்” என்றும் கூறுகிறது. எனவே இதைச் செய்வதற்காக யோசேப்பும், மரியாளும் எருசலேமுக்குச் சென்றனர். 25எருசலேமில் சிமியோன் என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் வாழ்ந்தான். அவன் நல்லவனும், பக்திமானுமாக இருந்தான். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு உதவும் காலத்தை சிமியோன் எதிர்பார்த்திருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவனோடு இருந்தார். 26கர்த்தரிடமிருந்து வரும் கிறிஸ்துவைக் காணுமட்டும் அவன் மரிப்பதில்லை என்று பரிசுத்த ஆவியனவர் சிமியோனுக்குக் கூறியிருந்தார். 27ஆவியானவர் சிமியோனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார். செய்யவேண்டியவற்றை நிறைவேற்றுவதற்காக மரியாளும், யோசேப்பும் தேவாலயத்திற்குள் சென்றனர். அவர்கள் குழந்தையாகிய இயேசுவை தேவாலயத்திற்குள் கொண்டு வந்தனர். 28சிமியோன் குழந்தையைத் தன் கரங்களில் தூக்கிக்கொண்டு, 29“ஆண்டவரே! இப்போது, உம் ஊழியனாகிய என்னை நீர் கூறியபடியே அமைதியாக மரிக்க அனுமதியும். 30நீர் நல்கும் இரட்சிப்பை என் கண்களால் கண்டேன். 31நீர் அவரை எல்லா மக்களுக்கும் முன்பாக ஆயத்தப்படுத்தினீர். 32யூதரல்லாத மக்களுக்கு உம் வழியைக் காட்டும் ஒளி அவர். உம் மக்களாகிய இஸ்ரவேலுக்கு பெருமையை அவர் தருவார்” என்று தேவனுக்கு நன்றி செலுத்தினான். 33இயேசுவின் தந்தையும், தாயும் சிமியோன் இயேசுவைக் குறித்துக் கூறியதைக் கேட்டு வியந்தனர். 34சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து இயேசுவின் தாயாகிய மரியாளிடம், “இந்தப் பாலகனின் நிமித்தமாக யூதர்கள் விழுவர்; பலர் எழுவர். சிலரால் ஏற்றுக்கொள்ளப்படாத தேவனின் அடையாளமாக இவர் இருப்பார். 35இரகசியமாக மக்கள் நினைப்பவை வெளியரங்கமாகும். நடக்கவிருக்கும் காரியங்கள் உங்கள் மனதை மிகவும் துக்கப்படுத்தும்” என்றான். 36தேவாலயத்தில் அன்னாள் என்னும் பெண் தீர்க்கதரிசி இருந்தாள். அவள் ஆசேர் என்னும் கோத்திரத்தைச் சார்ந்த பானுவேல் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவள். அன்னாள் வயது முதிர்ந்தவள். அவள் திருமணமாகித் தன் கணவனுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவள். 37பின் அவள் கணவன் இறந்து போனான். அவள் தனித்து வாழ்ந்து வந்தாள். அவள் எண்பத்து நான்கு வயது முதியவளாக இருந்தாள். அன்னாள் எப்போதும் தேவாலயத்திலேயே இருந்தாள். அவள் உபவாசமிருந்து இரவும் பகலும் தேவனை வழிபட்டுக்கொண்டிருந்தாள். 38தேவனுக்கு நன்றி செலுத்தியவண்ணம் அன்னாளும் அப்போது அங்கே இருந்தாள். தேவன் எருசலேமுக்கு விடுதலை அருள வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த எல்லா மக்களுக்கும் அவள் இயேசுவைக் குறித்துக் கூறினாள். 39தேவனின் பிரமாணம் கட்டளையிட்டபடியே அனைத்துக் காரியங்களையும் யோசேப்பும், மரியாளும் செய்து வந்தனர். பின்னர் கலிலேயாவில் உள்ள தங்கள் சொந்த நகரமாகிய நாசரேத்திற்குத் திரும்பினர். 40சிறு பாலகன் வளர்ந்து வந்தார். அவர் வல்லமையும், ஞானமும் உடையவரானார். தேவனின் ஆசீர்வாதம் அவரோடிருந்தது. 41ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகைக்காக இயேசுவின் பெற்றோர் எருசலேமுக்குச் சென்று வந்தனர். 42வழக்கம் போலவே இயேசு பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதும் அவர்கள் அப்பண்டிகைக்குச் சென்றனர். 43பண்டிகை நாட்கள் முடிந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். அவர்களுக்குத் தெரியாமலேயே இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். 44யோசேப்பும், மரியாளும் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தனர். இயேசு கூட்டத்தினரோடுகூட இருப்பதாக அவர்கள் எண்ணினர். சுற்றத்தார்களிடையேயும், நெருங்கிய நண்பர்களிடமும் இயேசுவைத் தேட ஆரம்பித்தனர். 45ஆனால் யோசேப்பும் மரியாளும் கூட்டத்தில் இயேசுவைக் காணாததால் அவரைத் தேடும்பொருட்டு எருசலேமுக்குத் திரும்பினர். 46மூன்று நாட்களுக்குப் பின்னர் அவரைக் கண்டனர். மத போதகர்கள் கூறுவதைக் கேட்பதும் அவர்களிடம் வினா எழுப்புவதுமாக இயேசு தேவாலயத்திற்குள் அமர்ந்திருந்தார். 47எல்லாரும் அவர் பேசுவதைக் கேட்டனர். அவரது புரிந்துகொள்ளும் திறனையும் ஞானம் நிரம்பிய பதில்களையும் உணர்ந்து அவர்கள் வியந்தனர். 48இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கண்டதும் வியப்புற்றனர். அவரது தாய் அவரை நோக்கி, “மகனே, நீ ஏன் இதை எங்களுக்குச் செய்தாய்? உனது தந்தையும் நானும் உன்னை நினைத்துக் கவலைப்பட்டோமே. நாங்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம்” என்றாள். 49இயேசு அவர்களை நோக்கி, “ஏன் என்னைத் தேடினீர்கள்? எனது பிதாவின் வேலை இருக்கிற இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!” என்றார். 50அவர் கூறியதன் ஆழமான உள் பொருளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. 51இயேசு அவர்களோடு நாசரேத்துக்குச் சென்றார். அவரது பெற்றோர் கூறியவற்றிற்குக் கீழ்ப்படிந்தார். அவரது தாய் நடந்த எல்லாவற்றைக் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தாள். 52இயேசு மேலும், மேலும் தொடர்ந்து கற்றறிந்தார். அவர் சரீரத்திலும் வளர்ச்சியுற்றார். மக்கள் இயேசுவை விரும்பினர். இயேசு தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு மாதிரியாயிருந்தார்.
Read More